`கே.ஜி.எப்.’, `காந்தாரா’, `சலார்’ போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் ஆர்சிபி அணியின் பங்குகளை வாங்க தீவிரம்
பெங்களூரு: `கே.ஜி.எப்.’, `காந்தாரா’ மற்றும் `சலார்’ போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து திரை உலகில் கோலோச்சிய ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கன்னட திரையுலகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளரான டியாஜியோ அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தகைய சூழலில், பல முன்னணி நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்தப் போட்டியில் தற்போது ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. விஜய் கிரகந்தூர் தலைமையிலான ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் ஆர்சிபி அணிக்கும் ஏற்கெனவே ஒரு நல்லுறவு உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல், ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னராக செயல்பட்டு வரும் ஹொம்பாலே பிலிம்ஸ், அணிக்கு பல்வேறு விளம்பரப் படங்கள், சினிமா பாணியிலான மேட்ச் டீசர்கள் மற்றும் ரசிகர்களைக் கவரும் வகையிலான பல பிரச்சாரங்களை வெற்றிகரமாக உருவாக்கி தந்துள்ளது. இந்த வணிக உறவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் விதமாக, அணியின் உரிமையில் பங்குதாரராக மாற ஹொம்பாலே நிறுவனம் விரும்புவதாகவும், இது தொடர்பாக டியாஜியோ நிறுவனத்துடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காகக் காத்திருந்த ஆர்சிபி அணி, நடப்பு தொடரில் தனது முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம், அணியின் சந்தை மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 17,000 கோடி) ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த மதிப்பு உயர்வு, முதலீட்டாளர்களின் கவனத்தை ஆர்சிபி பக்கம் ஈர்த்துள்ள நிலையில், ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தோடு மற்ற பெரிய நிறுவனங்களும் ஆர்சிபி அணியை வாங்கும் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது.
அதில் செரோதா இணை நிறுவனர் நிஹில் காமத், அதானி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதார் பூனாவாலா மற்றும் தேவயானி இன்டர்நேஷனல் போன்ற பெரும்புள்ளிகளும் ஆர்சிபியை வாங்க கோதாவில் குதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், கர்நாடகாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், மாநிலத்தின் கிரிக்கெட் அணியுடன் இணைவது உள்ளூர் ரசிகர்களிடையே அணியின் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதோடு, வணிக ரீதியில் வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.


