ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரளாவுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் இழப்பு: ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த 4ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் நடைபெற்றது. இதில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை இரண்டு அடுக்குகளாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் நேற்று டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “ஜிஎஸ்டி வரி விகிதம் 4 அடுக்கிலிருந்து 2 அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகித குறைப்பை கேரளா வரவேற்கிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பின் பலன்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டும்.
மேலும், சிமென்ட், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் காப்பீட்டு துறையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பீடு ஏற்படும். இதில் கேரளாவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் ஜிஎஸ்டி விகித மாற்றம் செய்யப்படவில்லையெனில், வருங்காலங்களில் பொதுநிதிக்கு ஆபத்தாக அமையும். மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை சரி செய்யாவிட்டால், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுவிநியோக முறை போன்ற சமூக பொறுப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்படும்” என்றார்.