வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியாது என்றால் வெளிப்படையாக சொல்ல வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: கடந்த வருடம் ஜூலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்துவிட்டது. மேலும் நிலச்சரிவு பாதிப்புகளுக்காக கேரள அரசு கேட்ட போதுமான நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபஸ்டியன் ஆகியோர் கூறியது: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கும்போது கேரளாவுக்கு மட்டும் ஓரவஞ்சனை காண்பிப்பது நல்லதல்ல. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், அசாம் மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.707.97 கோடி ஒதுக்கப்பட்டது. அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீயணைப்புத்துறையை நவீனப்படுத்துவதற்காக ரூ.903.67 கோடி ஒதுக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அதிகாரி தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் வெறும் சவடால்கள் மட்டுமே உள்ளன. ஒன்றிய அரசுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. ஆனால் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முன்வராதது தான் பிரச்னையாக உள்ளது. வெறும் சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது என்றால் அதை வெளிப்படையாக கூறவேண்டும். நீங்கள் யாரை முட்டாளாக்க பார்க்கிறீர்கள்? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து, வயநாட்டில் கடன் வாங்கியோர் பட்டியலை தாக்கல் செய்ய வங்கிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.