திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி சமூக நல ஓய்வூதியம் பெறாத திருநங்கைகள் உள்பட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
35 வயது முதல் 60 வயது வரை உள்ள மஞ்சள் மற்றும் பிங்க் நிற ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் 31.34 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 அதிகரிக்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ. 1600லிருந்து 2000 ஆக உயர்த்தப்படும். ஆஷா தொழிலாளர்களின் ஊதியமும் ரூ. 1000 அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
