திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ்நாடு, கேரளா மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், பாஜ, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை பாஜ தவிர மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
