திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி அஞ்சலியில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் உம்மன் சாண்டியின் 2வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இன்று காலை புதுப்பள்ளி வந்த அவர், உம்மன் சாண்டியின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து புதுப்பள்ளி கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும், நினைவஞ்சலி கூட்டத்திலும் கலந்து கொண்டார். அதன் பிறகு உம்மன் சாண்டியின் தொண்டு நிறுவனமான ஸ்மிருதி தரங்கம் சார்பில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட 12 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணியை திருவனந்தபுரத்திற்கு சென்று சந்தித்தார்.