திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் மூலம் இந்த மாதத்தில் நிபா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒரு சிறிய இடைவேளைக்கு பின்னர் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான ஒரு பள்ளி மாணவி நிபா பாதித்து சமீபத்தில் உயிரிழந்தார்.
இவருடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். ஆனால் இவருக்கு நிபா காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்ததில் அவருக்கு நிபா பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மரணமடைந்தார்.
கடந்த சில தினங்களில் கேரளாவில் நிபா பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவரின் வீட்டை சுற்றி 3 கி.மீ தொலைவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநபர்கள் அப்பகுதிக்கு வரவும், அப்பகுதி மக்கள் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.