திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் 100 அடி பள்ளத்தாக்கில் சரக்கு லாரி கவிழ்ந்து திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு ஸ்டீல் கம்பிகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (49) என்பவர் ஓட்டிச் சென்றார். செந்தில் என்ற இன்னொரு டிரைவரும் இந்த லாரியில் இருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் மானந்தவாடி தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம், மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பெரும் சிரமப்பட்டு மீட்புப் பணியை நடத்தினர்.
ஆனாலும் டிரைவர் செந்தில்குமாரை காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மானந்தவாடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இன்னொரு டிரைவரான செந்தில் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து கேளகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
