கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு, திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, கிராம மற்றும் பிளாக் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி உள்ளது. கேரளாவில் 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்டத்தில் திருவனந்தபுரம் எர்ணாகுளம் உள்பட 7 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அடுத்த கட்டத்தில் திருச்சூர், பாலக்காடு உள்பட 7 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் 71 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத்தில் 76 சதவீத வாக்குகளும் பதிவாயின. இந்த தேர்தலில் மொத்தம் 73.69 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கேரளாவில் 14 மாவட்டங்களில் மொத்தம் 244 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, கிராம மற்றும் பிளாக் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 6 மாநகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 5ல் வெற்றி பெற்றிருந்தது.
தற்போது கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கூட்டணியும், கோழிக்கோடு மாநகராட்சியை மட்டும் இடதுசாரி கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. இன்னும் 4 மாதங்களில் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
* கேரள அரசியலில் மாற்றம் பிரதமர் மோடி உற்சாகம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது கேரள அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். திருவனந்தபுரத்திற்கு நன்றி.
* கேரளாவிற்கு சல்யூட்: ராகுல்
உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது சல்யூட். இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது. பாஜவை பாராட்டிய சசி தரூர் திருவனந்தபுரத்தில் பா.ஜவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன், மேலும் நகர மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கேரள தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும்.
* எச்சரிக்கை மணி பினராய் விஜயன் கருத்து
வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல், பிளவு தந்திரங்களுக்கு மக்கள் பலியாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கை மணியாக தேர்தல் முடிவுகள் உள்ளன. வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தும் உறுதியுடன் செயல்படுவோம்.
* கேரளாவில் முதன்முறையாக மாநகராட்சியில் கணக்கை தொடங்கிய பாஜ
கேரளாவில் இதுவரை எந்த மாநகராட்சியிலும் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதில்லை. ஆனால் இம்முறை திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜ சாதனை படைத்துள்ளது. மொத்தமுள்ள 101 வார்டுகளில் பாஜ கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் 54 வார்டுகளில் வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 29 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு இம்முறை 19 வார்டுகள் கிடைத்துள்ளது. கடந்த 45 வருடங்களுக்கு மேலாக திருவனந்தபுரம் மாநகராட்சி இடதுசாரி கூட்டணி வசம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.


