Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் கருத்தை பரிசீலிக்க கூடாது: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* தமிழ்நாட்டின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாவிட்டால் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றால், தேவைப்படும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது.

ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது. தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.2.2006 மற்றும் 7.5.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனை தெளிவுபடுத்தியுள்ளது. பின்னர், 2018ம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்ச நீதிமன்றம் அப்போதே தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும். இந்த பிரச்னையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஒன்றிய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாக தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உள்பட வலுவான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட உள்ளது. எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

* தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணையை கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

* புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், உச்ச நீதிமன்ற அனுமதி தேவை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

* இந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உள்பட வலுவான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.