இந்தியாவிலேயே முதல் மாநிலம் வறுமை இல்லா மாநிலமாகிறது கேரளா: திருவனந்தபுரத்தில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
திருவனந்தபுரம்: கடந்த 2021ல் பினராயி விஜயன் அரசு மீண்டும் பொறுப்பேற்றபோது கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவை தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது முழுமை அடைந்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான நாளை (1ம் தேதி) திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் பிரபல நடிகர்கள் கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். உலக வங்கியின் வரையறையின்படி தீவிர வறுமை என்பது ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.180க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வதாகும். கடந்த 2021ல் இந்த திட்டத்தை கொண்டு வந்த போது கேரளாவில் 64,006 குடும்பத்தினர் தீவிர வறுமை பட்டியலில் இருந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் அரசால் வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் தற்போது முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் கேரளா வறுமை இல்லாத மாநிலமாக மாறியுள்ளது.
 
  
  
  
   
