திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேராம்பிராவில் ஒரு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக 30 வருடங்களுக்கு பின்னர் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பேரணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதினர். அவர்களை தடியடி நடத்தி போலீஸ் விரட்டியதை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் வடகரை தொகுதி காங்கிரஸ் எம்பி ஷாபி பறம்பில் உள்பட ஏராளமான காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென போலீசார் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டினர். இதில் எம்பி ஷாபி பறம்பில் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த காயத்தால் ஷாபி பறம்பிலின் மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே போலீசாரை தாக்கியது உள்பட பல்வேறு பிரிவுகளில் ஷாபி பறம்பில் எம்பி உள்பட காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 692 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 492 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.