திருவனந்தபுரம்: லண்டன் பங்குச்சந்தையில் கேரள அரசுக்காக பத்திரங்களை வெளியிட்டதில் மோசடி நடந்துள்ளதாக கூறி முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு நிதி திரட்டுவதற்காக லண்டன் பங்குச்சந்தையில் 9.72 சதவீத வட்டியில் ரூ.2150 கோடிக்கு மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கடந்த சில வருடங்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

