திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் வீடு மற்றும் மாவட்ட நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று ஒரு இமெயில் வந்தது. அதில், கேரள முதல்வர் வீடு மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு பிரிவு போலீசார் 2 இடங்களுக்கும் விரைந்து சென்று தீவிர பரிசோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் இமெயிலை அனுப்பியது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.