திருவனந்தபுரம்: கோழிக்கோடு அமீபா மூளைக் காய்ச்சலுக்கு நேற்று மேலும் ஒரு பெண் பலியானார். இதையடுத்து கேரளாவில் கடந்த 1 மாதத்தில் மாதத்தில் இந்தக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் கோழிக்கோட்டை சேர்ந்த 3 மாத குழந்தை உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மலப்புரம் மாவட்டம் வண்டூரை சேர்ந்த சோபனா (56) என்ற பெண் நேற்று உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 3 வாரங்களில் கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. தற்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீபா மூளைக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.