திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலுக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து கடந்த 1 மாதத்தில் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வயநாடு மாவட்டம் பத்தேரியை சேர்ந்த ரதீஷ், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை, 9 வயது சிறுமி அமயா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரம்லா, ஷோபனா (56) ஆகியோர் கடந்த சில வாரங்களில் இறந்தனர்.
15க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜி (51) என்பவர் இறந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் அமீபா மூளைக் காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.