புதுடெல்லி: பேரிடர்களால் பாதித்த கேரளா, உத்தரகாண்ட் உட்பட 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியில் ஒன்றிய அரசின் பங்களிப்பாக ரூ.1,066 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது’’ என கூறி உள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் ரூ.1,066 கோடி பேரிடர் நிதியில் அசாம் மாநிலத்திற்கு ரூ.375.60 கோடி, மணிப்பூருக்கு ரூ.29.20 கோடி, மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடி, மிசோரமுக்கு ரூ.22.80 கோடி, கேரளாவுக்கு ரூ.153.20 கோடி மற்றும் உத்தரகாண்டுக்கு ரூ.455.60 கோடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
Advertisement