*கொந்தளிக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகள்
கூடலூர் : கேரளா வனத்துறை சார்பாக பெரியாறு புலிகள் காப்பகத்தின் 75வது ஆண்டு தின நிகழ்வைக் கொண்டாடும் விதமாக பம்பையில் உள்ள காப்பகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து நேற்று முன் தினம் துவங்கிய பேரணி தேக்கடி வந்து சேர்ந்தது. மீண்டும் நேற்று காலை தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்தில் இருந்து குமுளி வழியாக தமிழக பகுதிகளான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் மேகமலை வழியாக தமிழக-கேரள எல்லையில் உள்ள மணலாறு கேரளா வனத்துறை பகுதியில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்தில் பேரணி நிறைவடையும். மேலும், லோயர் கேம்ப் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தமிழக விவசாய சங்கத்தினர் கூடலூர், கம்பம் மற்றும் சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா வனத்துறையினர் பேரணி செல்வதற்கும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா வனத்துறை வாகனங்களை தடுத்து நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் தமிழகப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, கூடலூர் கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து கேரளா வனத்துறையினர் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தவிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.
அதையும் மீறி நகருக்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்களை தடுத்து ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக கேரளா வனத்துறையினர் வாகனங்கள் நகர் வழியே வராமல் லோயர்கேம்பிலிருந்து புறவழிச் சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேகமலை மணலாற்றில் உள்ள கேரளா வனத்துறைக்கு சொந்தமான பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்தை சென்றடைந்தனர்.
முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள்
இது குறித்து பெரியாறு -வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமைகளுக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக இந்த கேரளா வனத்துறையான பெரியாறு புலிகள் காப்பகத்தின் அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு முட்டுக்கட்டைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். அணையில் மராமத்து பணிகள் செய்வதற்கும் தடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த வருடம் இடுக்கி மாவட்டம் வள்ளக்கடவு வனச் சோதனைச் சாவடி வழியாக பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக தமிழக பொதுப்பணித்துறையினர் கொண்டு சென்ற தளவாடப் பொருட்கள் பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, அணைக்கு கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே சாலை ஓரமாக கொட்டி வரும் அவல நிலை ஏற்பட்டது.
அதேபோல் தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் அலுவலகப் பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மர்மமான முறையில் அப்புறப்படுத்தப்பட்ட விவகாரத்தில் இந்த கேரளா பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் பின்புலமாக உள்ளனர் என்பது அனைவருக்கும் அறிவர். இன்று வரை அங்கு கேமராக்கள் பொருத்த அனுமதி தராமல் தடுத்து வருகின்றனர்.
அதுபோல் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறையினர் குடியிருப்பு பகுதிக்குள் மாலை 6 மணிக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. அதுபோல் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 2.4 ஏக்கர் ஆனவச்சால் பகுதியை தேக்கடிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் இந்த வனத்துறையினர்தான்.
2014க்கு பிறகு முல்லைக் கொடியில் உள்ள மழை மாணியை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிடவும் இதுவரை கேரளா வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான தமிழன்னை படகை இதுவரை இயக்க விடாமல் தடுத்து வைத்துள்ளனர். தொடர்ச்சியாக தமிழக உரிமை மற்றும் பெரியாறு அணை சார்ந்த விஷயங்களில் தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் கேரளா அரசின் நீர்வளத்துறை மற்றும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் பங்கு அதிகமாக உள்ளது.
எனவே பெரியாறு அணை பகுதிக்கு சாலை மார்க்கமாக பயன்படுத்த வல்லக்கடவு வனச்சாலையை தமிழக பொதுப்பணித்துறையினர் பயன்படுத்துவதற்கும், சாலையை செப்பனிடுவதற்கும், பேபி அணையை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பலப்படுத்த விடாமல் தடுத்து வரும் பெரியாறு புலிகள் காப்பக வாகனங்களை தமிழக பகுதிக்குள் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. இனி வருங்காலங்களில் இவ்வாறு நடக்குமானால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பால் நிகழ்ச்சி ரத்து
கேரளாவில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக எல்லையில் உள்ள குமுளியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளா வனத்துறையினர் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை மணலார் பகுதிக்கு லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் வரும் வழியில் கம்பம் பைபாஸ் சாலை துவங்கும் இடத்தில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் தமிழக விவசாயிகள் வாகனத்தை வழிமறித்து தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக பகுதிகளில் கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மற்றும் நிகழ்ச்சிகளும் இதனால் ரத்து செய்யப்பட்டன.