புதுடெல்லி: கேரளாவிற்கு வரும் நவம்பர் மாதத்தில் வருகை தரும் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட இருக்கிறார். இந்தியாவில் கால்பந்து போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது. இங்கு கால்பந்து ரசிகர்களும் மிக அதிகம். இந்த கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த நவம்பர் மாதத்தில் உலகின் மிகச்சிறந்த நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி வருகிறார். அவருடன் அர்ஜென்டினா அணியும் வர இருக்கிறது.
நவம்பர் 12ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் கேரளாவின் கொச்சி நகருக்கு வரும் அந்த அணி, ஆஸ்திரேலியாவுடன் விளையாட வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். நவம்பர் 12 முதல் 18ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாளில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், ஆஸ்திரேலியா அணியும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்று ஆட இருக்கின்றன என்ற தகவல் விளையாட்டுத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது.