காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
திருவனந்தபுரம் : காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட காப்பீட்டுதாரருக்கு காப்பீட்டு தொகை தர மறுத்த எல்.ஐ.சி. நிறுவனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவ சிகிச்சை செலவுத் தொகை ரூ.1.8 லட்சம் தர மறுத்த எல்ஐசி-யை எதிர்த்து காப்பீட்டுதாரர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், முதல் தவணையாக காப்பீட்டுதாரருக்கு ரூ.60,000 கேட்டபோது ரூ.5,600 மட்டுமே எல்ஐசி வழங்கியது என்றும் ஏற்கனவே உடல்நலக் குறைவு இருந்ததால் ரூ.1.8 லட்சம் 2ம் தவணையை தர மறுத்தது எல்ஐசி நிறுவனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது அரசியலமைப்பின் 21வது பிரிவான வாழும் உரிமையை மீறுவதாகும். மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை செய்த பிறகு காப்பீட்டு நிறுவனம் தன்னிச்சையாக தொகை தர மறுக்க முடியாது. தன்னிச்சையாக காப்பீட்டுத் தொகையை தர மறுப்பது சிகிச்சை அளிக்க மறுப்பதற்கு இணையானதாகும். மருத்துவ சிகிச்சை பெறுவது ஒருவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுதாரரின் பலவீனத்தை இதுபோன்ற நேரங்களில் தவறாக பயன்படுத்துகின்றன. ஆயுள் காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிகழ்வுகளின்போது காப்பீட்டுதாரரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத்தான். காப்பீட்டுதாரர் கோரிய தொகையை தாமதமின்றி எல்.ஐ.சி. விடுவிக்க உத்தரவிடுகிறோம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.