திருவனந்தபுரம்: பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு டிராக்டர்கள் மூலம் சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக் கூடாது என்று கடந்த 12 வருடங்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள ஏடிஜிபி அஜித்குமார் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும், பின்னர் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் டிராக்டரில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி ரவடா சந்திரசேகர் கேரள உள்துறை செயலாளருக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஏடிஜிபி அஜித்குமார் டிராக்டரில் சபரிமலை சென்றது தவறாகும்.
கால் வலி காரணமாக டிராக்டரில் சென்றதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். வரும் காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.