நைரோபி: கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில், பிரபலமான மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. டயான விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 40 கிமீ தொலைவில் மலைப்பாங்கான காடுகள் நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 12 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள். பலத்த இடி சத்தம் கேட்டதாகவும் பின்னர் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
