நைரோபி: கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் குவாலே மாகாணத்தில் இருந்து மசாய் மரா தேசிய சரணாலயத்தை நோக்கி, இன்று (அக். 28) காலை 12 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டயானி விமான ஓடுதளத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் மலைகள் மற்றும் காடுகள் நிரம்பிய பகுதியில், விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் நீடிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமான விபத்தினை கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
