Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் புறவழிச்சாலையுடன் கோவளம் சாலை இணைப்பு பணிகள் தீவிரம்

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு படூரில் இருந்து தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்க அரசு முடிவு செய்து, காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரையிலான திருப்போரூர் புறவழிச் சாலைப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டது. அதேபோன்று, படூரில் இருந்து தையூர் வரை உள்ள கேளம்பாக்கம் புறவழிச்சாலைப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டன. கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை இந்த புறவழிச்சாலையில் குறுக்கிடுவதால், அங்கு உயர்மட்டப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இரு பக்க சாலைகளையும் பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவளத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்லும்போது, இந்த புதிய புறவழிச்சாலையில் திரும்பம் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, புறவழிச்சாலையுடன் இந்த சர்வீஸ் சாலையை இணைக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அதிநவீன இயந்திரங்களை கொண்டு இச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு கேளம்பாக்கம் புறவழிச்சாலையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த, இரு புறவழிச்சாலைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருப்போரூர், கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.