துரைப்பாக்கம்: கேளம்பாக்கத்தில் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (43). இவர், நீலாங்கரையில் வசித்தபோது கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த அபினாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி நடத்திய மாத ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.
4 லட்சம் மற்றும் 5 லட்சம் என 2 ஏலச்சீட்டுகளில் திவ்யா பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அபினாஷ் மற்றும் செல்வி ஆகியோர் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி திவ்யாவிடமிருந்து 3.5 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வடைந்தபோது செல்வியிடம் ஏலச்சீட்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அபினாசும், செல்வியும் பணத்தை தராமல் காலம் நடத்தி வந்துள்ளனர்.
2022ம் ஆண்டு ஏலச்சீட்டு பணம் மற்றும் கடனாக கொடுத்த பணம் என ரூ.17.5 லட்சத்தை கேட்டபோது, கணவன், மனைவி இருவரும் பணத்தை தர மறுத்து திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனிடையே கொட்டிவாக்கம் வீட்டையும் காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து திவ்யா நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தியபோது, அபினாஷ் மற்றும் செல்வி இருவரும் அப்பகுதியை சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு மற்றும் கடன் பெற்று பண மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேளம்பாக்கத்தில் தனது வீட்டில் இருந்த செல்வியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான அபினாஷை போலீசார் தேடி வருகின்றனர்.