ராஜ்கோட்: இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 % வரி விதித்ததற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 75 % வரி விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘டிசம்பர் 31 வரை அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதிக்கு 11 % வரி விலக்கு அளிக்கும் ஒன்றிய அரசின் முடிவு இந்திய பருத்தி விவசாயிகளைப் பாதிக்கும். இது அமெரிக்க விவசாயிகளை பணக்காரர்களாகவும், குஜராத் விவசாயிகளை ஏழைகளாகவும் மாற்றும்.
இந்த விஷயத்தில் பிரதமர் தைரியம் காட்ட வேண்டும். முழு நாடும் உங்கள் பின்னால் நிற்கிறது. அமெரிக்கா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு நீங்கள் 75 % வரி விதிக்கிறீர்கள், நாடு அதைத் தாங்கத் தயாராக உள்ளது. அதை விதித்தால் போதும். பின்னர் டிரம்ப் பணிவாரா இல்லையா என்று பாருங்கள்’’ என்றார்.