Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழப்பாவூர் சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைவு

*விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை

பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. உரிய விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், தென்காசி, இலத்தூர், வடகரை, அச்சன்புதூர், குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், சுரண்டை, திருமலாபுரம், கீழக்கலங்கல், சாம்பவர்வடகரை இரட்டைகுளம், சேர்ந்தமரம், அச்சன்குன்றம், பரங்குன்றாபுரம், வாடியூர், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கல்லூரணி, அரியப்புரம், நாட்டார்பட்டி, நாகல்குளம், மகிழ், பெத்தநாடார்பட்டி, அருணாப்பேரி, பட்டமுடையார்புரம் மற்றும் கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பருவமழை சரிவர பெய்தால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம், சீனி அவரை, அவரைக்காய், பூசணிக்காய், தடியங்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை பயிரிடுவர்.

பயிரிடப்பட்ட காய்கறிகளை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மகசூல் செய்து விற்பனைக்காக பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். இங்கு விளையும் சின்ன வெங்காயம் பெயர் பெற்றது. இந்தாண்டும் கீழப்பாவூர் பகுதியில் 500 ஏக்கருக்கு சின்ன வெங்காயம் நாற்று பாவி பயிரிட்டு உள்ளனர். ஆனால் சின்ன வெங்காயம் விளைச்சல் மிகக் குறைவாக காணப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த திடீர் மழை மற்றும் தற்போது நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் சின்ன வெங்காயத்தை பலவித நோய்கள் தாக்கி விளைச்சல் இல்லாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விலையும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறினர்.

கடந்த சில வாரங்களாகவே மார்க்கெட்டிற்கு உள்ளூர் பகுதியான கடையநல்லூர், சங்கரன்கோவில், மலையான்குளம், புளியங்குடியில் இருந்தும், வெளி மாவட்டமான தேனி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் 600 டன் முதல் 1000 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வரத் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரத்தை ரூ.30 முதல் ரூ.40 வரையும், 2வது ரகத்தை ரூ.15 முதல் ரூ.20 வரையும் மொத்த வியாபாரிகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து வாங்குகின்றனர்.

ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், சின்ன வெங்காயத்தின் விற்பனை விலை மகசூலுக்கு செலவழித்த பணத்துக்கு கூட கட்டவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் குறைவு

சடையப்பபுரத்தை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், கடந்தாண்டு சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. இந்தாண்டு விலை கிடைக்கும் என்று நம்பி பயிரிட்டிருந்தோம். ஆனால் மகசூல் எடுக்கும் தருவாயில் பெய்த மழையால் சின்ன வெங்காயத்தில் கருகல் நோய் மற்றும் மஞ்சள் பழுப்பு நோய்கள் தாக்கி இலைகள் கருகி விளைச்சல் இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக ஏக்கருக்கு சுமார் 3 ஆயிரம் கிலோ முதல் 3,500 கிலோ வரை சின்ன வெங்காயம் மகசூல் இருக்கும்.

ஆனால் இந்தாண்டு விட்டுவிட்டு பெய்த மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் 1,500 கிலோவிற்கும் குறைவாகவே மகசூல் இருக்கிறது. மொத்த வியாபாரிகள் எங்களிடம் கிலோவுக்கு ரூ.20 முதல் 25 வரையே கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை எங்களுக்கு கட்டுப்படி ஆகாது, என்றார்.