Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழடி அகழாய்விலும் பாஜ அரசின் அரசியல்: தமிழரின் தொன்மை நாகரிகத்தை ‘குழி தோண்டி’ புதைக்க திட்டம்; அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கு வலுக்கும் கண்டனம்; 2 ஆண்டுக்கு பின் கேள்வி எழுப்புவது ஏன்? அமர்நாத் பதிலடி

தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் இவை அனைத்துக்கும் எதிராகவே ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செயல்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் இழுத்தடிப்பு, தமிழகத்திற்கான பேரிடர் நிதி புறக்கணிப்பு, தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான கல்வி நிதி புறக்கணிப்பு உட்பட பல விஷயங்களில், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகளையே செய்து வருகிறது. தற்போது தமிழரின் பல்லாயிரம் ஆண்டு நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிய கீழடி தொடர்பான அறிக்கையை திருப்பி அனுப்பி, தமிழ் மொழியின் தொன்மையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

* 2600 ஆண்டுகளுக்கு முந்தையது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசு சார்பில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வுப்பணி நடந்தது. அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் கிடைத்தன. இதில், பழங்காலத்திலேயே நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழர் வாழ்வியலும் வெளிப்பட்டது. இதையடுத்து அகழாய்வு பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தலைமையில் நடைபெற்ற 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்படவில்லை. முதல் மற்றும் 2ம் கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாய பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரிய வந்துள்ளது.

* 982 பக்க அறிக்கை

கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, இந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்தாண்டு ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தொல்லியல் அறிக்கையை ஒன்றிய அரசு வௌியிட வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

திருப்பி அனுப்பியது: நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் கேள்வி எழுப்பிய போது அகழாய்வு அறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தம் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அமர்நாத் ராமகிருஷ்ணுக்கு இந்திய தொல்லியல் துறை எழுதி உள்ள கடிதத்தில், ‘கி.மு.5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்திற்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுகிறது. அனைத்து விபரங்களும் அறிவியல்பூர்வமாக பெறப்பட வேண்டும். சில வரைப்படங்களும், சில விபரங்களும் தெளிவாக இல்லை. 2 தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, அறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த தொல்லியல் அறிஞரின் ஆய்வறிக்கையில் திருத்தம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அமர்நாத் கூறுவது என்ன? இதுதொடர்பாக அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒன்றிய அரசுக்கு அளித்துள்ள பதிலில், ‘கீழடி அகழாய்வு அறிக்கையில் கால வரிசைப்படி அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அடுக்குகள் வாரியாகவும், காலவரிசைப்படியும் ஆவணங்களும் இணைப்பில் உள்ளன. கீழடி குறித்த வரைபடம், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர்ந்தபட்ச தெளிவுத் திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இதனால், திருத்தம் தேவையில்லை. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தான் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்தை போக்கிடும் வகையிலான அனைத்து வகையான ஆவணங்களும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன’ என கூறியுள்ளார்.

* ‘3500 ஆண்டுக்கு முந்தைய தமிழர் தடங்களை மறைக்க முடியாது’

மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே ஒன்றிய அரசு தான் என பாஜ மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அதனால் தான் கேட்கிறோம். முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் ஒதுக்கிய நிதி, நீங்கள் சொல்லி வரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதற்றமடைந்து நிதியை நிறுத்தினீர்கள். வேதநாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை. எனவே நிதியை நிறுத்தினீர்கள். ஆய்வை நிறுத்தினீர்கள். ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள். முடக்க நினைத்தீர்கள். இது மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு. 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள் நீங்கள் நிதியை மறுப்பதன் மூலமோ, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்து விடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

* அமர்நாத் ராமகிருஷ்ணனை அதிரடியாக மாற்றியது ஏன்?

கீழடியில் ஒன்றிய அரசின் சார்பில் நடந்த அகழாய்வு பணியை ஒன்றிய தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் (2013 - 2016) முதன்முறையாக மேற்கொண்டனர். இவரது அகழாய்வு பணியில் தமிழரின் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம் மற்றும் முக்கிய தொல்பொருட்கள் கிடைத்தன. தமிழரின் நாகரிகமே தொன்மையானது என கீழடி தொல்பொருட்கள் மூலம் உண்மையான வரலாறு உலகிற்கு தெரிய வந்ததால், அகழாய்வு முடிவதற்குள்ளாகவே ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்று கூறி, கடந்த 2017ம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு திடீரென மாற்றப்பட்டார்.

இதற்கு கடும் ஆட்சேபம் எழுந்தது. பலரும் நீதிமன்றத்தை நாடினர். அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டது. இதனால் 2021, அக்டோபர் மாதம் ஒன்றிய தொல்லியல் துறையின் ஆலய பாதுகாப்பு கண்காணிப்பாளர் பணி வழங்கி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கிருந்த படி தனது அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தார். இதன்பிறகு அவர், டெல்லியிலுள்ள ஒன்றிய தொல்லியல் துறையின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது அசாம் மாநிலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

* மேடைதோறும் தவறாமல் மோடி சுடும் ‘தமிழ் வடை’

பிரதமர் மோடி அரசியல் கூட்டமாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி தமிழ் மொழியைப் பற்றியும், திருக்குறள் குறித்தும் பேசாமல் இருந்ததில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிவது என தன்னை ஒரு தமிழ் பற்றாளர் போலவே காட்டி வருகிறார். ஆனால், தமிழ்நாடு சார்ந்த விஷயங்களில் ஒரு போதும் முன்னிலைப்படுத்தியதே கிடையாது.

அந்தளவிற்கு பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாய் தான் இருக்கிறார். ‘‘உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமை சேர்க்கும் விஷயம். உலகெங்கிலும் இருக்கும் நாடுகளில் தமிழ்மொழி கற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ என்றும், ‘‘திருவள்ளுவர் தினத்தன்று, நமது நாட்டின் தலைசிறந்த தத்துவஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நாம் நினைவு கூர்கிறோம். அவரது குறள்கள் தமிழ் கலாசாரத்தின் சாரத்தையும், நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன’’ என பேசி வருகிறார். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை பற்றி பேசும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அதனை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன் என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.