புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயிற்சி விமானத்தின் பாகம் சாலையில் விழுந்ததால் சாலையின் நடுவே விமானம் தரையிறக்கப்பட்டது. புதுக்கோட்டை - திருச்சி சாலையில் விமானத்தின் முன்பகுதி பாகம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேலத்தில் இருந்து வந்த பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மா சத்திரத்தில் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானி சாதுர்யமாக செயல்பட்டு சாலையில் தரையிறக்கினார்.
சாலையில் விழுந்த பயிற்சி விமானத்தை அங்கிருந்த பொதுமக்கள் தள்ளிச் சென்று ஓரமாக நிறுத்தினர். தரையிறங்கிய பயிற்சி விமானம் சாலையோரம் தள்ளி நிறுத்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து சீரானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீரனூர் போலீசார் மற்றும் வருவாய் துறையின் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். போர் விமானம் தரையிறக்கப்பட்ட தகவல் அறிந்து ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டனர். விமானம் அருகே யாரையும் நெருங்க விடாமல் போலீசார் அனுப்பி வைத்தனர்.
தொழில்நுட்பக் கோளாறால் சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானத்தின் உள்ளே இருந்த இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்காக தஞ்சாவூர் விமான நிலையத்திலிருந்து பொறியாளர்கள் விரைந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
