Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரை முதல் சோளம் வரை... 2.5 ஏக்கரில் இயற்கை விவசாயம்!

கொரோனா காலத்திற்குப் பிறகு பலருக்கும் வேலை இழப்பு, தொழில் நஷ்டம், வேறு ஊருக்கு குடிபெயர்தல், புதிதாக பணி தேடுதல் என வாழ்வியல் மாற்றங்கள் நிறைய நடந்தன. அதன் தொடர்ச்சியாக, கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு விவசாயம் பக்கம் வந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தவர்தான் தர்மபுரியைச் சேர்ந்த சிங்காரவேல். செட்டிகரைக்கு அருகே உள்ள காந்தி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், டிப்ளமோ படித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் எட்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இப்போது அந்தப் பகுதியின் நம்பிக்கைக்குரிய விவசாயியாக மாறி இருக்கிறார். அவரைப் பற்றியும், அவரது விவசாய முறையைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் அவரது விவசாய நிலத்திற்குச் சென்றோம். ``எங்கள் பகுதியில் உள்ள கிணற்று நீர் கூட உப்புநீர்தான். இந்த நீரில் என்னென்ன சாகுபடி செய்ய முடியுமோ அதைத்தான் எங்கள் ஊர் விவசாயிகள் செய்துவருகிறார்கள். அந்த வகையில் நெல் சாகுபடியைத் தவிர பல வகையான சிறுதானியங்கள் மற்றும் காய்கறிப்பயிர்களைத் தொடர்ந்து பயிரிட்டு வரும் விவசாயிகளில் ஒருவராக நானும் இருக்கிறேன்’’ என தனது பேச்சைத் தொடர்ந்தார்.

``நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தாத்தா, அப்பா செய்துவந்த விவசாயம் இன்னமும் அதே நிலத்தில் தொடர்கிறது. அந்த காலத்தில் அனைத்து வகையான சிறுதானியங்களும் பயிரிட்டார்கள். விளைச்சல் எடுத்தார்கள். ஆனால், அவை அனைத்துமே செயற்கை முறை சாகுபடிதான். கொரோனா காலத்தில் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக விளைச்சல் பொருட்களை எடுத்துக்கொண்டு போகும்போது, கீரை காய்கறிகளில் மருந்து வாசம் வருகிறது என வாடிக்கையாளர்கள் சொல்வார்கள். கொரோனா காலத்து நோய் தாக்குதலும் சரி, உணவுப் பொருட்களில் வருகிற மருந்து வாசமும் சரி. இரண்டுமே தீங்குதான். அதனால், நாம் விவசாயம் செய்யலாம். அதுவும், இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாமென யோசனை வந்தது. அப்படித்தான் நான் இயற்கை விவசாயத்திற்குள் வந்தேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

``நான் இயற்கை விவசாயத்தை தொடங்கும்போது அம்மா, அப்பா, உறவினர் என அனைவருமே வேண்டாம் என மறுத்தார்கள். இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவாக வரும். வருமானம் பார்க்க முடியாது எனச் சொன்னார்கள். ஆனால், நான் விடாப்பிடியாக இயற்கை விவசாயம்தான் செய்வேன் என உறுதியாக இருந்தேன். அதற்காக, தர்மபுரி மாவட்ட வேளாண் அலுவலகத்தில் ஒரு மாதம் இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி எடுத்தேன். பின், எனது நிலத்தில் இயற்கைவிவசாயத்தை தொடங்கினேன். எங்களுக்குச் சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இத்தனை வருடம் செயற்கை விவசாயம் செய்த நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு பழக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.முதலில், அந்த நிலத்தில் பல வகையான தானியப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை மொத்தமாக பயிரிட்டு, அவை வளர்ந்தபின் அதே நிலத்தில் மடக்கி உழுது மண்ணிற்கு தேவையான அடி உரத்தைக் கொடுத்தேன். பின், அந்த நிலத்தில் பல வகையான கீரை, சம்பங்கி, மக்காச்சோளம், தீவனப்புல் என பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கினேன். இந்த வருடம் பருத்தி சாகு படியையும் தொடங்கி இருக்கிறேன். கீரையில் அரைக்கீரை, முழுக்கீரை, பாலக்கீரை என இன்னும் சில கீரைகள் சாகுபடி செய்து வருகிறேன். தினமும் 50 முதல் 100 கட்டுகள் கீரை சாகுபடி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்கிறேன்.

கடந்த வருடம் இயற்கை முறையில் அரை ஏக்கரில் கேழ்வரகு சாகுபடி செய்து 1.5 டன் அறுவடை எடுத்தேன். ஒரு கிலோ ரூ.42 வீதம் 1.5 டன் கேழ்வரகை ரூ.63 ஆயிரத்திற்கு விற்பனை செய்தேன். 20 ஆயிரம் செலவு போக மீதிப்பணம் லாபமாக கிடைத்தது. இந்த வருடம், கேழ்வரகுக்கு பதிலாக பருத்தி சாகுபடி செய்திருக்கிறேன். 3 மாடுகள் 20 கோழிகளும் வளர்த்து வருகிறேன். மாடுகளில் இருந்து கிடைக்கும் பால், கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டை ஆகியவற்றையும் விற்பனை செய்கிறேன். மாடுகள் போடும் கழிவுகளில் இருந்து பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். எனது நிலத்தை முழுமையாக இயற்கை முறைக்கு கொண்டுவர மூன்று வருடங்கள் ஆனது. இந்த வருடம்தான் அனைத்து சாகுபடியுமே நல்ல விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்போதுதான், அப்பாவுக்கும் உறவினர்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வந்திருக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.

தொடர்புக்கு:

சிங்காரவேல்: 76672 63225.

காலை 10 லிட்டர் மாலை 7 லிட்டர் என மூன்று மாடுகள் மூலம் தினமும் 17 லிட்டர் பாலைக் கறந்து விற்பனை செய்கிறார் சிங்காரவேல். மேலும், கோழி வளர்ப்பின் மூலம் கிடைக்கும் முட்டைகளில் இருந்தும் கூடுதல் வருமானம் பார்க்கிறார்.

தினசரி வருமானத்திற்கு கீரையும், முட்டையும் கை கொடுக்கிறது. அதுபோக, 10 நாட்களுக்கு ஒருமுறை பாலில் இருந்து வருமானம், மாதம் ஒருமுறை சம்பங்கி சாகுபடியில் இருந்து வருமானம், 3 மாதத்திற்கு ஒருமுறை மக்காச்சோளத்தில் இருந்து வருமானம் என தொடர் வருமானம் தரும் விவசாயத்தை செய்து வருவதாக சிங்காரவேல் கூறுகிறார்.

பயன்மிகு இயற்கை உரம்!

ஆடுகளின் கழிவுகள், பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அருமையான இயற்கை உரம் தயாரிக்கலாம்.5 கிலோ ஆட்டுப்புழுக்கை, 3 லிட்டர் ஆட்டுச்சிறுநீர், 1.5 கிலோ சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு, அல்லது அரைத்த உளுந்து, அல்லது பாசிப்பயறு ஆகியவற்றை ஓர் இரவு தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டுப்பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, 50 கிராம் ஈஸ்ட் மற்றும் ஒரு டஜன் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும். ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடுதண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதேபோல், கரும்புச்சாறுக்கு பதிலாக 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளையில் வைத்து நன்கு கலக்கவும். அதை இரண்டு வாரம் நிழலில் வைத்து, பின்னர் உபயோகிக்கலாம்.ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை பூச்சிகளோ, புளுக்களோ முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைப்படி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு, சுமார் இரண்டு லிட்டர் ஆட்டோட்டத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களுக்கு தெளிக்கவும்.