Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கெடு விதித்தவருக்கு கேடு வந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்களாமே விஜிலென்ஸ் எங்கே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘எல்லாம் மாங்கனி நகர்தான்... இங்குள்ள காக்கி டிபார்ட்மெண்டில் ரெண்டு ஸ்டேசனை விஜிலென்ஸ் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு சுத்துறாங்களாம்.. நகரில் பதிமூன்று ஸ்டேசன்கள் இருக்காம்.. அவர்களுக்கெல்லாம் ஏராளமான வேலை இருக்கும் என்பதால் சரக்குகளை கண்டுபிடித்து அழிப்பதற்காக பிரிவு ஒன்று செயல்படுதாம்.. இந்த பிரிவுக்கு வேலைக்கு போவதென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பே தவம் கிடப்பாங்களாம்.. இப்பிரிவில் வேலை செய்வோர் ஒவ்வொரு ஆண்டுக்கும் இடம் மாற்றிக்கொண்டே இருப்பாங்களாம்.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இடமாற்றம் வழங்கப்பட வில்லையாம்.. இதனால் அங்கிருப்போர் ஹேப்பியாக இருந்தாலும் குறிப்பிட்டுச்சொல்லும் வகையில் மகிழ்ச்சியா இல்லையாம்..

அங்கிருக்கும் அதிகாரி ஒருவர் ரொம்பவும் நேர்மையானவருன்னு சொல்லி சிரிக்கிறாங்க... இங்குள்ள சந்துக்கடை, பொந்துக்கடை, கூடுதல் நேரம் விற்பனை செய்யும் இடமாக இருந்தாலும் எந்த பக்கம் இருந்து வந்தாலும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே ஒன்றாக போட்டு விட வேண்டுமாம்.. சீட்டு குலுக்குவதுபோல குலுக்கு குலுக்கென குலுக்கி மொத்தமா கொட்டுவாங்களாம்.. அதன்பிறகு கணக்கெடுத்து பிரித்து வழங்கப்படுமாம்.. இது ஒருபக்கம் இருந்தாலும் தனியாகவும் ஒரு ரூட்டு போய்கிட்டிருக்காம்.. இதனால ரொம்பபேருக்கு கோபம் வந்திருக்காம்.. இந்த விவகாரம் மெதுவாக விஜிலென்ஸ் காதுக்கு போயிருக்காம்.. அவர்களும் விளக்கெண்ணெயை கண்ணில் ஊத்திக்கிட்டு களம் இறங்கியிருப்பதாக தகவல் கசிஞ்சியிருக்கு... இங்க தான் இப்படி என்றால் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் பகுதியை எடுத்துக்கிட்டால் ரகசிய பேச்சுவார்த்தை தான் அதிகமா இருக்குதாம்..

இங்கும் விஜிலென்ஸ் பார்வை பதிந்திருக்காம்... எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நேர்மையான காக்கிச்சட்டைக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கெடு விதித்தவருக்கு கேடு வந்திருச்சே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக் கட்சியில் ஏற்பட்டுள்ள சூறாவளிக்கு டெல்லி மலராத கட்சியின் தலைமை தான் காரணமுன்னு இலைக்கட்சி தலைவருக்கு தெரிஞ்சு போச்சாம்.. ஏற்கனவே மலராத கட்சியின் கூட்டணியில் இருந்து தைரியமாக வெளியே வந்து தேர்தலை சந்திச்சாராம் இலைக்கட்சி தலைவர்.. இந்த செயலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலராத கட்சியால் மறக்கவே முடியாதாம்.. இதற்காக நண்பனாக பழகி, தோள் மீது கைபோட்டுக்கொண்டே கதையை முடித்துவிட திட்டமிட்டு ஒன்றிய உள்துறை மந்திரி ஓடோடி வந்தாராம்.. ஆனால் அவர்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுபோச்சாம்..

இதனால கூட்டணியிலிருந்து தேனிக்காரரையும், குக்கர்காரரையும் வெளியே போக சொல்லி ஒரு நெருக்கடி கொடுத்தாங்களாம்.. எங்களுக்கான நாடாளுமன்ற தேர்தலில் ஒருசீட் கூட கிடைக்காத வகையில் தோல்வியடைய வைத்தவரை, சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஆக்க நாங்கள் பாடுபட வேண்டுமா என்ற கேள்வியோடு முதலில் ஒன்றிணைப்போம் என்ற போர்வையுடன் புகுந்து கட்சியை சிதைப்போம் என்ற உறுதியோடு இருக்காங்களாம் டெல்லி.. எதற்கும் இலைக்கட்சி தலைவர் அசைந்து கொடுக்காததால் இறுதியில் கோபிக்காரரை வைத்து ரெண்டாவது முறையாக நெருக்கடி கொடுக்க வச்சதாக இலைக்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அந்த கோபிக்காரரோ, இலைக்கட்சி தலைவரின் பொய்யை லைட்டா தோலுரித்து காட்டினாராம்.. பிரிந்து கிடக்கும் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என இலைக்கட்சி தலைவரை யாரெல்லாம் போய் பார்த்தோம் என்ற பட்டியலை படிச்சதோடு, பத்து நாள் கெடு விதிச்சார்.. அப்போது சின்னமம்மியை சந்தித்து பேசவும் கோபிக்காரர் திட்டம் போட்டிருந்தார்.

ஆனால் இவரது கெடுவை இலைக்கட்சி தலைவர் ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாக செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக தூக்கிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் 6 பேரின் பதவியும் காலியாகி விட்டது. இதனால் அந்த தரப்பு அதிர்ந்துபோய் கிடக்கிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் பிரசார பயண கூட்டத்துக்காக ‘விட்டமின் ப’ அள்ளி கொடுக்க தயாராக இருக்காங்களாமே நிர்வாகிங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சேலத்துக்காரர் பிரசார சுற்றுப்பயணம் செய்துக்கிட்டு வர்றாரு.. கடந்த மாதம் டெல்டா மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட சேலத்துக்காரர் விரைவில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்திற்கு வர உள்ளாராம்.. இதற்கான ஏற்பாடுகளை இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்துக்கிட்டு வர்றாங்களாம்.. அப்போது அதிகளவில் கூட்டத்தை கூட்டி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என கட்டாயத்தில் இருப்பதால் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனராம்..

இதில் தானாக கூட்டத்தை சேர்க்க முடியாது என்பதால் ‘விட்டமின் ப’ கொடுத்தாவது கூட்டத்தை சேர்க்க அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.. மலைக்கோட்டை பகுதியில் கொடுத்ததை விட சற்று கூடுதலாக ‘விட்டமின் ப ’ கொடுக்க முடிவு செய்து அதற்கான விநியோகத்தை ஆரம்பிக்க இருக்காங்களாம்.. பிரசாரத்திற்காக கூட்டத்தை கூட்டவே எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு என நிர்வாகிகளுக்குள்ளேயே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘செக்போஸ்ட்டில் பெயரளவுக்கு நடக்கும் சோதனையால் சின்ன சின்ன கடைக்காரர்கள் தான் சிக்கிறாங்களாமே.. எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக- ஆந்திர எல்லை மாவட்டங்களாக வெயிலூர், மிஸ்டர்பத்தூர், குயின்பேட்டை இருந்து வருது.. இந்த மாவட்டங்களின் வழியாக தான் ஆந்திராவில் இருந்து அதிகமான வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை முழுமையாக தடுக்க முக்கிய செக்போஸ்ட்டில் தீவிரமாக செக்கிங் செய்து கொண்டு இருந்தாங்க.. அரசு, தனியார் பஸ்களில் பயணிகளின் உடைமைகளையும் கூட விட்டுவைக்க மாட்டாங்க..

ஆனால் கடந்த சில மாதங்களாக இது வெறும் பெயரளவுக்கு மட்டும் தான் நடக்கிறதாம்.. உள்ளூர் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் இதை கண்டும் காணாமலும் இருந்து வருகிறார்களாம்.. இதனால் சிறுசிறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உள்ளூர் போலீசார் கைது செய்து வர்றாங்க.. இதற்கு காரணமே செக்போஸ்ட்டில் தீவிர சோதனை இல்லாததே என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கு.. எனவே உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து இதை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குமுறலும் ஒலிக்க தொடங்கி இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.