Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கே.சி.வீரமணியை சந்தித்ததால் அதிமுகவுடன் கூட்டணியாகாது: பிரேமலதா பேட்டி

ஓசூர்: கே.சி.வீரமணியை சந்தித்ததால் அதிமுகவுடன் கூட்டணியாகாது என்று பிரேமலதா தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று தேமுதிக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். பின்னர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு சுதந்திரமடைந்த பின்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர், அண்ணா போன்றவர்கள் கல்விக்காக உழைத்தார்கள். தற்போது, தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றால், அதனை தேமுதிக வரவேற்கும். ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. நாங்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தேமுதிக ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தாது.

நாங்கள் அதில் விதிவிலக்காக இருப்போம். எத்தனை பாரதியார், எத்தனை பெரியார் வந்தாலும், பேசினாலும் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மிக கடுமையான சட்டம் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அவரது ஓட்டலில் தங்கி இருந்ததால் அந்த சந்திப்பு நடந்தது.

ஓட்டலில் தங்கி இருந்ததற்கு எல்லாம் கூட்டணி என்றால் எப்படி. கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. திமுக, அதிமுக தனித்தனி கூட்டணி, விஜய்யின் நிலைப்பாடு ஏதும் தெரியவில்லை, சீமானை பொறுத்தவரை தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் ஜனவரி 9ம் தேதி அறிவிப்போம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

* பிறந்த மாநிலத்தில்தான் ஓட்டுரிமை

பிரேமலதா கூறுகையில், ‘தமிழகம் வந்தாரை வாழவைக்கும். இங்கு வந்தால் வேலை செய்யலாம், சம்பாதிக்கலாம். ஆனால், ஓட்டுரிமை என்பது நீங்கள் எங்கு பிறந்து வளர்ந்தீர்களோ, அந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்கக் கூடாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். ஆனால், தேர்தல் சமயத்தில் ஓட்டுபோட இங்கு வருகிறார்கள். இங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு, அவர்களது மாநிலங்களில் வாக்குரிமை இருந்தால் தான், அது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்’ என்றார்.