மதுரை: ஐடி மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலையை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் இன்று முறையீடு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் கவின் செல்வகணேஷ். சென்னை ஐ.டி. நிறுவன மென்பொறியாளராக பணியாற்றினார். இவரும், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்த எஸ்ஐ தம்பதி சரவணன்- கிருஷ்ணகுமாரி மகளும் பள்ளியில் படித்தபோது காதலித்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற கவின் செல்வகணேஷ், அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள சித்த மருத்துவமனைக்கு கடந்த 27ம் தேதி அழைத்துச் சென்றார்.
அப்போது கவினின் காதலியின் சகோதரரான சுர்ஜித், அவரை டூவீலரில் அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கவின், அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் இன்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது வக்கீல்கள் ஆஜராகி, ஐடி மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடியில் ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி, விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டனர். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் மனுவாக தாக்கல் செய்தால், அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என தெரிவித்தனர்.