கவின் ஆணவப் படுகொலை வழக்கு; சம்பவ இடத்தில் கைதான எஸ்ஐ இருந்ததற்கு ஆதாரம் உள்ளது: சிபிசிஐடி ஐகோர்ட் கிளையில் வாதம்
மதுரை: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கவின், கடந்த ஜூலை 27ம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணனின் ஜாமீன் மனு ஏற்கனவே நெல்லை நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. எனவே, தனக்கு ஜாமீன் கோரி சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில், ‘‘மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்ததற்கு போதுமான ஆதாரம் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. கவினின் தாயார் தரப்பில், ‘‘எங்கள் தரப்பில் கூடுதல் வாதங்களை முன் வைக்க எங்களுக்கு போதுமான கால அவகாசம் தேவை’’ என கூறப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ. 27க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



