Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட பகுதியான பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து? சிவில் மேட்டரை ஒரு மணி நேரத்தில் தீர்த்து வைத்த இன்ஸ்பெக்டர், பிரபல ரவுடியுடன் ரகசிய ஆலோசனை

நெல்லை: இன்ஜினியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சிவில் விவகாரங்களில் ஒரு மணி நேரத்தில் பேசி முடிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கவின், நெல்லையில் கடந்த மாதம் 27ம் தேதி காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாளைங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் விடுமுறையில் சென்றார்.

இந்தநிலையில் விடுமுறை முடிந்து, இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் நேற்று பணியில் சேர்ந்தார். சேர்ந்தவுடன் அவர், நெல்லை பொறுப்பு கமிஷனரும் சரக டிஐஜியுமான சந்தோஷ் ஹதிமணியை சந்தித்தார். அப்போது அவர், ஒரே பிரச்னைக்கான 2 புகார் கவர்களை கொடுத்து, விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். நெல்லையைச் சேர்ந்த ஏ.எம்.பாரூக் என்பவர், சில நாட்களுக்கு முன்னர் நெல்லை போலீஸ் பொறுப்பு கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘நெல்லை ஆலந்தூரில் இடப் பிரச்னை தொடர்பாக எனக்கும் ஏ.கே.ஆர்.பாரூக் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையில் சமரசமாக செல்ல எனக்கு ரூ.2.5 கோடி கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்தில் தனக்கு பங்கு தருமாறு நெல்லையைச் சேர்ந்தவரும் பல கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவருமான கோட்டூர் ரபீக் என்பவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்தப் புகாரை வாங்கிய பொறுப்பு கமிஷனர், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பாமல் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று கோட்டூர் ரபீக் ஒரு புகார் கொடுக்கிறார். அந்தப் புகாரில், ‘என் மீது பல கொலை வழக்குகள் இருந்தது. சென்னையைச் சேர்ந்த ஏ.கே.ஆர்.பாரூக் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு கிண்டியல் 10 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்தநிலத்தை கவனிக்க ஒரு நபர் வேண்டும் என்று கேட்டார். இதனால் நெல்லையைச் சேர்ந்த ஏ.எம்.பாரூக் என்பவரை அனுப்பி வைத்தேன். அவர், அந்த நிலத்தை பாதுகாத்தவர், பின்னர் காலி செய்ய மறுத்து விட்டார். இதற்காக ரூ.3 கோடி கேட்டு, ரூ.2.5 கோடி வாங்கியுள்ளார்.

இது குறித்து ஏ.கே.ஆர்.பாரூக் என்னிடம், நீங்கள் அறிமுகம் செய்து வைத்தவர், மிரட்டி பணம் வாங்கிவிட்டார் என்றார். இதனால், அந்தப் பணத்தை நான் கேட்டேன். ஆனால் அவரை நான் மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் சென்னை பாரூக் கொடுத்த பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அதில், சென்னையைச் சேர்ந்த பாரூக்தான் பாதிக்கப்பட்டவர் என்று கோட்டூர் ரபீக் கூறியுள்ளார். அவர்தான் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கோட்டூர் ரபீக், கமிஷனரை வக்கீலுடன் சென்று சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

இரு புகாரையும் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. அதேநேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து புகார் குறித்து விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவுக்குத்தான் கமிஷனர் அனுப்பியிருக்க வேண்டும். ஏன் சட்டம் ஒழுங்கு போலீசுக்கு அனுப்பினார் என்பது புரியதா புதிராக உள்ளது. இதனால்தான் இரு தரப்பையும் இன்ஸ்பெக்டர் அழைத்து பேசி, இருவர் மீதும் பிஎன்எஸ் 129 விதியின் கீழ், போலீஸ் நிலைய பதிவேட்டில் குறிப்பிட்டு அவர்களை தாசில்தார் முன்பு ஆஜர்படுத்தி பிணைய பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு 1 மணி நேரத்தில் அனுப்பி வைத்தார்.

சிவில் விவகாரத்தில் ஏன் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் இவ்வாறு பஞ்சாயத்து செய்தார் என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நேற்று மதியம், ஒரு தரப்பாக புகார் கொடுத்த கோட்டூர்ரபீக், அவரது வக்கீல், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியுள்ளனர்.

இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் சிவில் வழக்குகளை ஏன் காசிப்பாண்டியன்தான் விசாரிக்க வேண்டும் என்று பொறுப்பு கமிஷனர் அனுப்பினார், ஏன் வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர், குற்றம்சாட்டப்பட்டவர், மதுரை ரவுடியை ஏன் காசிப்பாண்டியன் சந்தித்துப் பேசினார் என்பது மர்மமாக உள்ளதாக நெல்லை போலீசார் தெரிவிக்கின்றனர்.