கட்டுமஸ்தான உடல், வசீகர பேச்சுகளால் 8 பெண்களை மயக்கி உல்லாசம் கல்யாண மன்னன் அதிரடி கைது: திருமண தகவல் மையம் மூலம் விதவைகளை குறிவைத்து வீழ்த்தியது அம்பலம்
சென்னை: சென்னையில் திருமண இணையதளம் மூலம் அறிமுகமாகி, மறுமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 8 விதவைப் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி, நகையை பறித்துச் சென்ற எம்பிஏ பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39), எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஏற்கனவே 2 திருமணங்களை செய்துள்ளார்.
அவர்களோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சுரேஷ்குமார் திருமண தகவல் மையம் மூலமாக மற்ற பெண்களுக்கும் வலை விரித்துள்ளார். இவரிடம் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை சுரேஷ்குமார் அள்ளி வீசியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் நாளடைவில் இவர்கள் பழகி வந்துள்ளனர். பல இடங்களுக்கு ஒன்றாக சென்றும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இளம்பெண் நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ்குமாரும் இளம்பெண்ணும் சந்தித்துள்ளனர். அப்போது, ஆசை வார்த்தை கூறிய சுரேஷ் குமார் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், இருவரும் காரில் அமர்ந்து பேசியுள்ளனர்.
அப்போது, பையில் இருந்த இளம்பெண்ணின் 10 சவரன் நகையை சுரேஷ்குமார் திருடிவிட்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் தனது பையை சோதித்த இளம்பெண் அதில் இருந்த 10 சவரன் தங்க நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுரேஷ் குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் சுரேஷ்குமார் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ் குமாரை கைது செய்தனர். சுரேஷ் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுரேஷ் குமார் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் காவல் நிலையங்களில் இதுபோன்ற திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சுரேஷ் குமார் இதுபோன்று 8 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சுரேஷ் குமார் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தனது உடலை மிகவும் கட்டுமஸ்தாக வைத்துள்ளார். அந்த உடலின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இளம்பெண்களை சுரேஷ் குமார் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதுவரை 8 பெண்கள் அவரின் காதல் வலையில் சிக்கியுள்ளனர்.
4 பெண்களை கட்டுமஸ்தான் உடலை காட்டியும், வசீகரிக்கும் பேச்சின் மூலமாகவும் சுரேஷ் குமார் மயக்கியுள்ளார். மேலும், 4 பெண்களுடன் செல்போன் தொடர்பில் இருந்து அவர்களோடு சாட்டிங் செய்து வந்துள்ளார். கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து செய்து தனியாக வசித்துவரும் இளம் வயது பெண்களை மட்டுமே குறிவைத்து சுரேஷ்குமார் செயல்பட்டு வந்துள்ளார். அந்த பெண்களிடம் உங்கள் குழந்தைகளை எனது குழந்தை போல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பியே இளம்பெண்கள் சுரேஷ் குமாரின் வலையில் விழுந்துள்ளனர். அவ்வாறு வலையில் விழும் இளம்பெண்களை தனியே சந்தித்து உல்லாசம் அனுபவித்து விட்டு அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு செல்வதை சுரேஷ்குமார் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டபோது இளம்பெண் அளித்த புகாரிலேயே சுரேஷ்குமார் இப்போது போலீசில் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சுரேஷ் குமாரின் காதல் வலையில் சிக்கி நகை, பணத்தை இழந்து ஏமாந்த பெண்கள் மேலும் யாரேனும் இருந்தால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.