காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த ரூ.20 கோடி மதிப்புள்ள 82 கன்டெய்னர் லாரிகள் திருட்டு என புகார்: 21 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னை: 20 கோடி ரூபாய் மதிப்புடைய கன்டெய்னர் லாரிகள் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 80 கன்டெய்னர் திருடப்பட்டதாகவும் மற்றும் 8 கன்டெய்னர் மாயமானதாகவும் ஹாங்காய் நிறுவனத்தின் தமிழ்நாட்டின் சிஇஓ சுப்பிரமணியன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். ஹாங்காய் நாட்டில் உள்ள தனியார் நிறுவனமான Casmo Limited என்ற தனியார் நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 90 கன்டெய்னரில் PVC ரெசின் இறக்குமதி செய்யப்பட்டது.
அந்த 90 கன்டெய்னரில் 88 கன்டெய்னர்கள் போலியான ரசீதுகளை கொடுத்து திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் போலி ஆவணங்களை காட்டி 82 கன்டெய்னர்களை எடுத்து சென்றது அம்பலமானது. இதையடுத்து கன்டெய்னரை அபகரித்த தனியார் பிளாஸ்டிக் நிறுவனம், ஷாப்பிங் கம்பெனி உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.