*உர பயன்பாட்டை குறைக்க ஆலோசனை
கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் காட்டுநாவல் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் உர பயன்பாட்டைக் குறைத்தல் பற்றிய விவசாயிகள் பயிற்சி நடந்தது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட ஆலோசகர் சர்புதீன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் விக்னேஷ், இளநிலை உதவியாளர் இலக்கியதாசன் (வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை), உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயராஜ், உதவி வேளாண்மை அலுவலர் ஜெனவோ, உதவி தோட்டக்கலை அலுவலர் திலகா, கரும்பு உதவியாளர் ராமகிருஷ்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். வேளாண்மை அலுவலர் விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்.
மேலும், வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பி.எம்.கிசான் திட்டம் மற்றும் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் இதர திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறினார்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட ஆலோசகர் சர்புதீன் அவர்கள் பேசுகையில், ‘யூரியா பயன்பாட்டை குறைத்தால் பூச்சி நோய் தாக்குதல் குறையும் என்றும், குறைவான யூரியா பயன்படுத்துவதால் நெற்பயிரில் அதிக மகசூல் பெறலாம் என்றும், மண்வள அட்டை பரிந்துரைப்படி உரம் இடவும் அல்லது ஒரு தெளிப்பிற்கு 26 கிலோவுக்கு மேல் இடவேண்டாம் என்றும் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்திட யூரியா போன்ற தழைச்சத்துக்களை பிரித்து பிரித்து இட வேண்டும் என்று எடுத்துரைத்தார். இளநிலை உதவியாளர் இலக்கிதாசன் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயராஜ் பேசுகையில், தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறினார். இப்பயிற்சியில், கலந்துகொண்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெனவோ, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜீவ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சங்கீதா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.