காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை விற்பனை 15 பேர் கும்பல் சிக்கியது: 650 மாத்திரைகள் பறிமுதல்
வேலூர்: காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகளை விற்க முயன்ற 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 650 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 138 கடைகளில் சோதனை செய்தனர். இதில் சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் நேற்றிரவு காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 650 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பிடிபட்டவர்களிடம் இருந்து, போதை மாத்திரைகள் எங்கிருந்து வாங்கப்படுகிறது? இதை எங்கே விற்பனை செய்யப்படுகிறது? இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.