*லெவல் கிராசிங்குகள் பூஜ்ஜிய நிலை எட்ட நடவடிக்கை
வேலூர் : நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளே இல்லாத நிலையை உருவாக்கும் பணியில் இந்தியன் ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் திருச்சி கோட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தில் சித்தேரி, துத்திப்பட்டு பகுதிகளில் ரயில்வே சுரங்க பாதைகளும், தொரப்பாடி அரியூர், கஸ்பா ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
தற்போது வேலூர் பெங்களூரு சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் சென்னை டிவிஷனுக்கு உட்பட்ட காட்பாடி ரயில்வே சந்திப்பை ஒட்டியுள்ள பிரம்மபுரம் கிராமத்தில் இருந்து சஞ்சீவிராயபுரம் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே தண்டவாளங்களின் இருபுறமும் தலா 90 மீட்டர் நீளம் என மொத்தம் 180 மீட்டர் நீளத்துக்கு சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதில் தண்டவாள பகுதி மட்டுமே 17 மீட்டர் நீளம் கொண்டது. இப்பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை ரயில்வே கோட்ட பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொறியாளர்களிடம் கேட்டபோது, ‘படிப்படியாக ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் ரயில்வே சுரங்க பாதைகள், ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் தென்னக ரயில்வேயில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் இல்லாத பூஜ்ஜிய நிலை எட்டப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தனர்.