Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டமஞ்சுவில் நான்குவழி சாலை பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

*கனரக வாகனங்கள் செல்ல தடை

சித்தூர் : நான்குவழி சாலை பணிக்காக கட்டமஞ்சு சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. சித்தூர் மாநகரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கனரக வாகனங்கள் மாநகரத்திற்குள் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு, கட்டமஞ்சு சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த மாநகராட்சி கூட்ட தொடரில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில், கலெக்டர் சுமித்குமார் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் நரசிம்ம பிரசாத்தின் ஆலோசனையின்படி மாநகராட்சி திட்டத்துறை அதிகாரி நாகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று கட்டமஞ்சு சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகள், கட்டிடங்களை மாநகராட்சி திட்டத்துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து மாநகராட்சி திட்டத்துறை அதிகாரி நாகேந்திரன் கூறியிருப்பதாவது: மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் முன்னதாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, சாலை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், வணிக நிறுவன கட்டிடங்களை அகற்றி வருகிறோம்.

மிக விரைவில் கட்டமஞ்சு சாலையை நான்கு வழி சாலையாக மாற்றியமைக்கப்படும். அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இனிகனரக வாகனங்கள் மாநகரத்திற்குள் செல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும். சாலையை ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மாநகராட்சி சார்பில் அதிரடியாக அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, மாநகர திட்டமிடல் மேற்பார்வையாளர் பாலாஜி மற்றும் திட்டத்துறை ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.