*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சாத்தான்குளம் : கடாட்சபுரம் - சொக்கலிங்கபுரம் தாம்போதியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சி கடாட்சபுரத்திலிருந்து சொக்கலிங்கபுரம், மெய்யூர், வெங்கட்ராயபுரம், தாண்டவன்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக உடன்குடி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக அரசு பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த சாலையில் கருமேனி ஆறு செல்வதால் கடாட்சபுரம் - சொக்கலிங்கபுரம் இடையே தாம்போதி பாலம் உள்ளது. இந்த ஆற்றில் மழைக்காலத்திலும், மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் தாம்போதி பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் செல்லும்போது போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது. அப்போது சொக்கலிங்கபுரம் கிராமம் தீவு போல் மாறிவிடும். இங்குள்ள மக்கள் சாத்தான்குளம், முதலூர் உள்ளிட்ட பகுதிக்கு வந்து செல்ல பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தாம்போதி பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் சித்திரைபாண்டி கூறுகையில், மழைக்காலத்தில் கருமேனி ஆற்றில் வெள்ளம் வரும்போது இந்த தாம்போதி பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க அரசுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தாம்போதி பாலம் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது.
கருமேனி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது இந்த சாலையில் 10நாட்கள் மேலாக முடக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும். ஆதலால் அரசு அதிகாரிகள், மக்கள் நல பிரதிநிதிகள் மக்களின் நிலைமையை உணர்ந்து கடாட்சபுரம் - சொக்கலிங்கபுரம் இடையே தாம்போதி பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.