காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றம்: அலுவலகத்துக்கு நடந்து வந்த முதல்வர் உமர் அப்துல்லா
ஜம்மு: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து குளிர்கால தலைநகரான ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் உமர் அப்துல்லா தனது அலுவலகத்துக்கு நடந்தே வந்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தில் ஜம்முவும் கோடைக்காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும். தர்பார் நகர்வு என்ற அழைக்கப்படும் இந்த நடைமுறை ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ரன்பீர்சிங் என்பவரால் 19ம் நுாற்றாண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு துணை நிலை ஆளுநராக சின்கா இருந்த போது தர்பார் நகர்வு நடைமுறை நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தன் பிரசாரத்தின் போது தர்பார் நகர்வு நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா உறுதி அளித்தார். தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கடும் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் யூனியன் பிரதேச தலைநகர் ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இனி ஆறு மாதங்களுக்கு ஜம்முவில் தலைமை செயலகம் செயல்படும். இதையொட்டி முதல்வர் உமர் அப்துல்லா நேற்று ஜம்முவில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே வந்தார். அவருடன் துணை முதல்வர் சுரேந்தர் சவுத்ரி, அமைச்சர் ஜாவேத் ராணா உள்ளிட்டோர் வந்தனர். வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் ஜம்முவில் மீண்டும் தலைமை செயலகம் செயல்பட தொடங்கியதால் ஏராளமான வியாபார பிரமுகர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
 
 
 
   