ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் பாதை நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழந்துள்ளார். உத்தரகண்டின் ஆறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டேராடூன், தெஹ்ரி, பவுரி, நைனிடால், சம்பாவத் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மின்னல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இத்தகைய மழை காரணமாக கத்ராவில் இருந்து செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் காலை 8.50 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதை குதிரை சவாரி செய்பவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இடமாகவும் உள்ளது. மலையில் இருந்து பாறைகள் விழுந்ததில் பக்தர்கள் பலர் காயம் அடைந்த நிலையில், 4 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவசரகால மீட்புக் குழுக்கள் விரைவாக மீட்புப் பணியைத் தொடங்கி , காயம் அடைந்த 4 பக்தர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அரக்கோணத்தை சேர்ந்த குப்பன் சீனிவாசன்(70) உயிரிழந்தார். அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.