கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் காயமடைந்தவர்களிடம் சிறப்பு குழு விசாரணை: உள்ளூர் டிவி சேனல் உரிமையாளர்களிடம் வீடியோ பதிவு ஆதாரங்கள் சேகரிப்பு
கரூர்: கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிறப்பு குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். உள்ளூர் டிவி சேனல் உரிமையாளர்களிடம் வீடியோ பதிவு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு கரூரில் 2 நாள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் 2 எஸ்பிக்கள், 1 ஏடிஎஸ்பி, 5 இன்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5ம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொண்டனர். விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி இறந்தார்களா அல்லது மற்றவர்களின் கால்களால் மிதிக்கப்பட்டோ, தாக்கப்பட்டோ இறந்தார்களா என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று 4வது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை பயணியர் மாளிகைக்கு வரவழைத்து அவர்களிடம் விஜய் பிரசாரத்தின் போது சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
கரூரில் உள்ளூர் டிவி சேனல்கள் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. இதனையடுத்து குழுவில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர், 10க்கும் மேற்பட்ட டிவி சேனல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதன் உரிமையாளர்களிடம் நேற்றுமுன்தினம் சம்மன் வழங்கினார். அந்த சம்மன்படி 7க்கும் மேற்பட்ட உள்ளூர் டிவி சேனல்களின் உரிமையாளர்கள் நேற்று பயணியர் மாளிகையில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு ஆஜரானார்கள். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, தவெக சார்பில் உங்களுக்கு பிரசாரம் குறித்து எதுவும் விளம்பரம் தரப்பட்டதா, நிகழ்ச்சிக்கு எத்தனை மணிக்கு ஊழியர்களை அனுப்பினீர்கள், யார் யாரை வீடியோ எடுக்க அனுப்பினீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து விஜய்யின் பிரசார கூட்டத்திற்கு முன்பும், அதன்பின்பும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள், பிரசார கூட்டத்திற்கு விஜய் நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் உள்ள நாமக்கல் தவிட்டுப்பாளையம், திருக்காம்புலியூர் சந்திப்பு, முனியப்பன் கோயில் சந்திப்பு, வேலுச்சாமிபுரம் பிரசார கூட்டம் நடைபெற்ற இடம் ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்த வீடியோ பதிவு, வேலுச்சாமிபுரம் பிரசாரத்திற்கு விஜய் வருகை தந்த போதும், பொதுமக்கள் கலைந்து சென்ற போதும் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.