கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு: விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: ஜனநாயகன் படத்துக்கான ஷூட்டிங்காக நடத்தப்பட்டதா என மாவட்ட செயலாளர் மதியழகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
கரூர்: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் விஜய் பிரசாரத்துக்கு 60க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு வந்தது ஏன் என்பது பற்றி கேள்வி எழுப்பி விசாரித்தனர். ஜனநாயகன் படத்துக்கான ஷூட்டிங்காக இந்த வீடியோக்கல் பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மதியழகன், இவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, கரூரில் கடந்த 5ம் தேதி முதல் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே ஜாமீன் கேட்டு பவுன்ராஜ் தரப்பில் தாக்கல் செய்த மனு, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இந்நிலையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான விசாரணை கரூர் மாவட்ட தலைமை
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மதியழகனை 2 நாள் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்காக மாலை 6 மணிக்கு அரசு சுற்றுலா மாளிகைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து மதியழகனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது பிரசாரத்திற்கு 60க்கும் மேற்பட்ட டிரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டது, பாதுகாப்புக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகளை புலனாய்வு குழுவினர் கேட்டனர். மேலும் ஜனநாயகன் படத்தில் கரூர் காட்சிகளை இடம்பெறச் செய்வதற்காக இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவரோ, ட்ரோன்கள் எடுத்தது எல்லாம் தலைமைக் கழகம்தான். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த கிடுக்கிப்பிடி விசாரணை நள்ளிரவு 11 மணிவரை நீடித்தது. தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்த மதியழகனிடம் 2வது நாளாக இன்று காலை முதல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதியழகனை வேலுசாமிபுரத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதியழகனின் 2 நாள் கஸ்டடி நாளையுடன் (11ம் தேதி) முடிவடைவதால் அவரை புலனாய்வு குழுவினர் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மதியழகனுக்கு ஜாமீன் வழங்க கோரி தவெக வழக்கறிஞர்கள், நேற்று காலை கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட வழக்கில் சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் வெங்கடேசனை (30) நேற்று மதியம் சேலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 23ம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சேலத்தை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் நேற்று முன்தினம் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
* 3 குழுக்களாக பிரிந்து விசாரணை
சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முதல் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குழு, அரசு சுற்றுலா மாளிகையில் மதியழகனிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதவிர அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள பொதுப்பணித்துறை திட்ட அலுவலக கட்டிடம், புகழூரில் உள்ள டிஎன்பிஎல் வளாகம் ஆகிய இடங்களிலும் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 இடங்களிலும் இன்றும் விசாரணை நடந்து வருகிறது.