கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களை பார்க்காமல் ஓடிய விஜய்க்கு, தலைமைப்பண்பு இல்லை என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று விசாரணையை தொடங்கியது. இச்சம்பவத்தில் இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அப்பகுதி மக்கள் என பலரிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.