Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரே கண்ணீரில் மிதக்கும்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இனி நான்தான் இலைக்கட்சிக்கு அடையாளம் எனக்கூறி கோட்டையானவரின் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘சோப்பு நுரை புகழ் மாஜி அமைச்சர் சமீபகாலமாக உற்சாகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறாராம்.. மஞ்சள் மாவட்டத்துல இலைக்கட்சி அடையாளமா இருந்த கோட்டையானவர் கட்சிக்கு எதிரா போர்க்கொடி தூக்கியதால கட்சி தலைமை கோட்டையானவரின் பதவிகள் எல்லாத்தையும் பறிச்சு ஓரங்கட்டி உட்கார வெச்சிருச்சு.. எதிர்பார்த்த அளவுக்கு கோட்டையானவர்க்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவும் கிடைக்காததால் இனி பழையபடி கோட்டையானவர் கட்சியில் வலம் வர வாய்ப்பு இல்லைன்னு சொல்றாங்க.. இந்த வாய்ப்பை தனக்கு சாதகமா சோப்பு நுரை புகழ் மாஜி அமைச்சர் பயன்படுத்த முடிவு செஞ்சு அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறாராம்.. குறிப்பாக கோட்டையானவரின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு, ‘இனி மஞ்சள் மாவட்டத்துல இலைக்கட்சிக்கு அடையாளமே நான்தான். இத்தனை நாள் அவரை நம்பி உங்களுக்கு என்ன செய்துவிட்டார். பதவியில் இருக்கும் போதே யாருக்கும் எதுவும் செய்யலை. இப்ப பதவியும் இல்லை மரியாதையும் இல்லை. இனி அவரால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. யோசிக்காம என்கூட வந்திருங்க..’ என்று கோட்டை ஆதரவாளர்களுக்கு வலைவீசி வருகிறாராம் சோப்பு நுரை புகழ். இந்த தகவல் கோட்டையானவரின் காதுகளுக்கு எட்டியதும் நொந்து போயிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘41 உயிர் பறிபோனதை காரணமாக வைச்சு நடிகரை இழுப்பதற்காகவே சிபிஐ விசாரணை கேட்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கண்ணை மூடிக்கொண்டு கனவில் ஒரு விரல் புரட்சி என்ற கோஷத்தோடு அரசியலில் புகுந்த நடிகரின் நடவடிக்கையால் 41 உயிர்கள் பறிபோனது தான் மிச்சமாம்.. எந்தவித கொள்கையும் இல்லாமல் கால் போன போக்கில் பிரசாரத்தை தொடங்கினாராம்.. அவரை பின்தொடர்ந்து வருவோரில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஓட்டு உரிமையே கிடையாதாம்.. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்ப்பரிப்புடன் வந்து அநியாயமாக உயிர்போனது தான் மிச்சம் என்ற நிலை ஏற்பட்டு போச்சாம்.. உட்கார்ந்தால் முதல்வர் சீட்டில் தான் அமர்வேன் என்றும் கூட்டணி மந்திரிசபை அமைப்பேன் என்றும் அறிவிச்சாராம்.. இவருடன் கூட்டணி சேர வேண்டும் என்ற தீராத ஆசையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இலைக்கட்சி தலைவர், முதல்வர் இருக்கை எனக்கு தான் என்றதால் இழுபறியில் போய்கிட்டிருக்காம்.. இருவரும் இரண்டரை ஆண்டுக்கு முதல்வர் பதவியை பங்குபோட்டுக்கொள்ளலாம் என்ற பேச்சும் அவர்கள் மத்தியில் உலாவிகிட்டிருக்காம்.. நடிகருடன் கூட்டணி சேரும் பட்சத்தில் மலராத கட்சியை உதறி தள்ளிட்டு வரும் எண்ணமும் இலைக்கட்சி தலைவருக்கு இருக்குதாம்.. ஆனால் ஒன்றிய மலராத கட்சியோ இலைக்கட்சி தலைவர் தோள் மீது சவாரி செய்யும் திட்டத்துடன் இருக்குதாம்.. தற்போது தனியாகவே சவாரி செய்துகிட்டிருந்த நடிகரோ, 41 உயிர்கள் போன விவகாரத்தில் சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கிக்கிட்டாராம்.. இனிமேல் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அவருக்கு நீதிமன்றம் கூட அனுமதி கொடுக்க வாய்ப்பு இல்லை என்று தான் சட்டநிபுணர்கள் சொல்றாங்க.. இவ்வாறு சட்ட சிக்கலில் சிக்கியிருக்கும் நடிகரை காப்பாற்ற புதிய சரித்திர நாடகம் ஒன்றை நடத்த மலராத கட்சியின் கூட்டணியில் இருக்கும் லட்டர்பேடு கட்சிகள் ரொம்ப தீவிரமாக இருக்காங்களாம்.. ஒன்றிய கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கிட்டிருக்காங்களாம்.. இவ்வாறு சிபிஐ விசாரணைக்கு வந்தால், நடிகரை காப்பாற்றுவதுடன் கூட்டணியும் வச்சிக்கிடலாம் என்ற திட்டத்தோடு செயல்படுறாங்களாம்... கரூரே கண்ணீரில் மிதக்கும்போது, கருணை இல்லாத லட்டர்பேடு கட்சிகள் கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பது நாகரிகமற்ற செயலாக இருப்பதாக மக்கள் ரொம்பவே வேதனைப்படுறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘களவு காரால் பிரச்னையில் மாட்டியிருக்காராமே மலர் பார்ட்டி நிர்வாகி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிதான் குகையில தொடங்கி ஊர்ல முடியுற பகுதி. இந்த ஊர்ல மலர் பார்ட்டியை சேர்ந்த நிர்வாகி ஒருத்தரு சமீபத்துல கார் வாங்கியிருக்கார். அந்த காரு களவு செய்த காருன்னு சொல்றாங்க. இந்த களவு காரு, சென்னையில இருக்குற ஒரு டோல்கேட் தாண்டி போயிருக்குது. அந்த டோல்கேட் பதிவுகளை பார்த்து சென்னை காக்கிகள் வெயிலூருக்கு உடனே பறந்து வந்திருக்காங்க. குகை ஊர்ல இருக்குற மலர் பார்ட்டி நிர்வாகிகிட்ட இந்த களவு கார் பத்தின விசாரணைய நடத்தியிருக்காங்க. அதுக்கு அந்த நிர்வாகியும், எனக்கு இது களவு காருன்னே தெரியாதுன்னு சொல்லியிருக்காங்க. விசாரணையில அந்த காரு வெயிலூர் சிட்டிக்கு பக்கத்துல பொய்ல தொடங்கி கைல முடியுற ஊர்ல வாங்குனதுன்னு தெரியவந்திருக்குது. அந்த கார் களவு எப்படி நடந்ததுன்னு இப்ப காக்கிகள் விசாரணை பரபரப்பாக போய்கிட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.