சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அதன் வலியில் இருந்தும், சோகத்தில் இருந்தும் மக்கள் இன்னும் மீளாமல் உள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே 2 பெண் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை குழுவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியில் அவர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


