கரூரில் விஜய் பிரசாரத்தில் கூடிய கூட்டம் கட்டுக்கடங்கா கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்: பலி கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு போகாம, சென்னைக்கா போக முடியும்? செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான கேள்வி
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கூடிய கூட்டம் கட்டுக்கடங்கா கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம். பலி குறித்து கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு போகாம, சென்னைக்கா போக முடியும்? என செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி வீடியோ ஆதாரங்களுடன் நேற்று முன்தினம் அளித்த பேட்டி: முதலில் தவெக கேட்ட இடங்கள் லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை. இந்த இடங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டத்தை நிறுத்த முடியாது. எனவே வேலுச்சாமிபுரம் பகுதியை முடிவு செய்தனர். பொதுவாக ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்தும் போது அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டத்துக்கேற்ப இடத்தை தேர்வு செய்ய வேண்டும். துயர சம்பவம் நடந்த பகுதியில் ஆயிரக்கணக்கான செருப்புகள் கிடந்தன. ஆனால் குடிநீர் பாட்டில்கள் ஒன்றுகூட இல்லை.
தவெகவினர் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு குடிநீரே வழங்கவில்லை. முதலில் மதியம் 12 மணிக்கு கூட்டம் என்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு விஜய் வருகிறார் என்றனர். அவர் வந்ததோ இரவு 7 மணிக்கு. எனது விசாரணையில் சம்பவ இடத்தில் மாலை 4 மணிக்கு 5,000 பேர் மட்டுமே இருந்தனர். குறித்த நேரத்தில் கூட்டம் நடந்திருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். அனைத்து தொலைக்காட்சிகளும் நடந்தவற்றை காட்டின. கூட்ட நெரிசலில் வெளியேற முடியாத மக்கள், ஜெனரேட்டர் ரூம் அடைப்புகளை உடைத்து கொண்டு வெளியேறினர். அந்த பகுதியில் இருந்த ஆபரேட்டர், ஜெனரேட்டரை ஆப் செய்தார்.
அவர்கள் அமைத்த விளக்குகளும் அணைந்தன. ஸ்பீக்கரும் வேலை செய்யவில்லை. கீழே இருந்த தொண்டர்களில் ஒருவர் தண்ணீர் கேட்க முயன்றார். பின்னர் விஜய்யின் கவனத்தை ஈர்க்க செருப்பை வீசியுள்ளார். இது விஜய் பேசிய தொடக்கத்திலேயே நடந்தது. அதன்பிறகு தான் தண்ணீர் பாட்டில்களை மக்களை நோக்கி விஜய் வீசினார். பொதுவாக எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கூட்டம் நடத்தும்போது பிரசார வாகனத்தின் முன்பக்கத்தில் அமர்ந்து இருப்பார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தின் மேலே நிற்பார்கள்.
இந்த கூட்டத்தில் கூட்டம் நடந்த இடத்திறகு 500 மீட்டர் முன்பாகவே விஜய் வந்த பிரசார வேனில் அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. விளக்கும் அணைக்கப்பட்டது. இதனால் அவரை பார்க்க காத்திருந்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். காவல்துறை கூட்டம் அதிகமாக உள்ளது என எடுத்துக்கூறியும் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொண்டு சென்று தான் நிறுத்தினர். தன்னை பார்க்க வந்தவர்கள் பொதுக்கூட்டம் பகுதிக்கு வர வேண்டும் என்ற வகையில் இப்படி செய்திருப்பதாக தெரிகிறது.
அவர் மேடை ஏறிய 19வது நிமிடம் பேசுவதை நிறுத்தினார். 2 ஆம்புலன்ஸ்கள் நாமக்கல்லில் இருந்து விஜய் கூடவே கொண்டு வரப்பட்டது. மேலும் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் ரூ.3 ஆயிரத்துக்கு வாடகைக்கு பேசி தயாராக வைத்திருந்தார். மொத்தம் 7 ஆம்புலன்ஸ்களை அவர்கள் தான் ஏற்பாடு செய்திருந்தனர். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு எங்கள் அறக்கட்டளையில் இருந்து குடிநீர் பாட்டில்கள் நள்ளிரவு நேரத்தில் கொண்டு வந்து கொடுக்கப்பட்டன. கடைகள் இல்லாததால் நாங்கள் வைத்திருந்ததை கொண்டு வந்து கொடுத்தோம்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கொடுத்தோம். இதை அரசியலாக பார்க்கவில்லை. எங்கள் கட்சி தலைவர் உத்தரவுபடி தான் செய்யப்பட்டன. பாதிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே எப்படி நான் மருத்துவமனைக்கு சென்றேன் என்று கேள்வி கேட்கின்றனர். நான் அப்போது கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தி கொண்டிருந்தேன். சம்பவம் பற்றி தெரியவந்தவுடன் அருகில் இருந்த அமராவதி மருத்துவமனைக்கு விரைந்தேன். அதேபோல் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் மருத்துவமனைகளில் தான் இருந்தனர்.
பாதிப்பு பற்றி அறிந்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் டிக்கெட் போட்டு சென்னைக்கா ஓட முடியும். அப்படிப்பட்ட சூழலை சிலர் எதிர்பார்த்தனர். கரூரில் கூடிய தவெக கூட்டம் கட்டுக்கடங்கா கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.
அதே இடத்தில் நடந்த அதிமுக கூட்டத்துக்கு 15,000 பேர் கூடினர். தவெக கூட்டத்துக்கு மேலும் கூடுதலாக 10,000 பேர் வந்திருந்தனர். அந்த இடம் 25,000 பேர் வரை கூடக்கூடிய இடம் தான். எந்த கட்சியாக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்று உள்ளது. கட்சி தலைவரின் வாகனத்துக்கு முன்பாக கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சென்று தொண்டர்களை ஒழுங்குபடுத்தி நிற்க வைத்து தலைவரை பார்க்க வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்வார்கள். அந்த நிலை தவெக கூட்டத்தில் இல்லை. யார் சொல்லியும், யாரும் கேட்கவில்லை. காவல்துறை சொல்லியும் கேட்கவில்லை. இவ்வாறு கூறினார்.
* வீடியோ ஆதாரங்கள் வெளியீடு
தவெக கூட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது, டிரான்ஸ்பார்மர் இருந்த பகுதியில் தடுப்புகளை உடைத்து மக்கள் நுழைவது, அங்கு பணியில் இருந்தவர் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்வது, விஜய் குடிநீர் பாட்டில் வீசியது, ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்தபோதும் பேச்சை நிறுத்தாமல் விஜய் பேசி கொண்டிருந்தது. இருமுறை தண்ணீர் கேட்டும், உதவி கேட்டும் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் விஜய்யின் கவனத்தை ஈர்க்க செருப்பு வீசியது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு வீடியோ ஆதாரத்துடன் மெகா சைஸ் டிவியில் காண்பித்து செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
* செருப்பு வீச்சு நடந்தது எப்போது?
‘‘என்னை (செந்தில் பாலாஜி) பற்றி பேசும்போதோ, பேசிய பின்போ செருப்பு வீச்சு நடந்தது அல்ல. வாகனத்தில் ஏறிய விஜய், 3 நிமிடம் என்னை பற்றி பேசி விட்டு தேர்தல் வாக்குறுதிகள், கரூர் விமான நிலையம் குறித்து பேசினார். அவர் பேச ஆரம்பித்த 6வது நிமிடம் ஒருவர் மயங்கி விழுந்த பகுதியில் இருந்து செருப்பு வீசப்பட்டது. தொடர்ந்து 2வது செருப்பும் வீசப்பட்டது. 7வது நிமிடத்தில் கீழே பலர் மயங்கியது குறித்து விஜய்யிடம் சொல்கின்றனர். அதன்பின் மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 16வது நிமிடத்தில் மீண்டும் என்னை பற்றி விஜய் பேசினார். எந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாமல் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது’’ என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
* எதிர்மறை கருத்து தெரித்தவிர்களிடம் பாஜ குழு விசாரிக்காதது ஏன்?
செந்தில்பாலாஜி கூறுகையில், ‘கரூர் வந்த பாஜ உண்மை கண்டறியும் குழு, ஏன் மணிப்பூர் செல்லவில்லை. கும்பமேளாவுக்கு செல்லவில்லை. பாதிப்புகள் இருந்த பல இடங்களுக்கு செல்லாத குழு கரூருக்கு மட்டும் உண்மை கண்டறிய வந்துள்ளனர். யாரெல்லாம் சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துக்களை முன் வைத்தார்களோ அவர்களிடம் இந்த குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.